செம்மணியில் அதிரடிப் போராட்டம்: நீதிமன்றத் தடையும் முறியடிப்பு!

#SriLanka #Protest #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Chemmani Mass Grave
Abi
1 hour ago
செம்மணியில் அதிரடிப் போராட்டம்: நீதிமன்றத் தடையும் முறியடிப்பு!

சித்துபாத்தி மனித புதைகுழிப் பகுதிக்கு நீதி அமைச்சர் விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

"நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு" எனும் பிரதான கோஷத்தை முன்வைத்து, தங்களின் நீதிக்கான போராட்டத்தை உறவுகள் வீதியில் இறங்கி வெளிப்படுத்தினர்.

முன்னதாக, சித்துபாத்தி இந்து மயான சூழல், யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் நீதிமன்றப் பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படும் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் செய்திருந்தனர்.

அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க பிரதிநிதிகளான சிவகுமார் இளங்கோதை, கனகரஞ்சினி, சிவானந்தன் ஜெனிட்டா, வேலன் சுவாமிகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்பினருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி, சித்துபாத்தி இந்து மயான ஏ9 வீதி தொடக்கம் பஸ்ரியன் சந்தி வரையிலும், அங்கிருந்து யாழ்ப்பாண காவல்துறை நிலையம் வரையான பிரதான வீதியிலும் வீதி மறியல் செய்வதோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.

தடையை உடைத்துத் திரண்ட மக்கள் வெள்ளம் நீதிமன்றத் தடை உத்தரவையடுத்து, போராட்டத்தை முடக்கும் நோக்கில் பெருமளவிலான காவல்துறையினர் செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதிகளில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இருப்பினும், இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுலோகங்களைத் தாங்கியவாறு, கண்ணீருடனும் ஆக்ரோஷத்துடனும் அவர்கள் தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்கும் வருகை தரவுள்ள நீதி அமைச்சருக்கும் எதிராகப் பதிவு செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4