பணத்திற்காக விற்கப்படும் வவுனியா காடுகள்: அதிகாரிகள் மீது அதிரடிப் புகார்!
வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்கள அதிகாரிகளின் நேரடி உதவி மற்றும் ஒத்தாசைகளுடன், பலநூறு ஆண்டுகள் பழமையான கன்னிக் காடுகள் (தொடர்வனங்கள்) பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதாகப் பாரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழல் அதிகாரிகள் தங்களின் தவற்றினை மறைக்க, சாதாரண மக்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி சுற்றுச்சூழல் அமைச்சினால் வர்த்தமானி மூலம் ஒதுக்குக் காடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 'புளியங்குளம் ஒதுக்கு வனம்' (சுமார் 9,361 ஹெக்டேயர் பரப்பளவு கொண்டது) வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாலமாக விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காட்டின் தென்பகுதியில், கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் சுமார் 50 முதல் 60 ஏக்கர் வரையிலான வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளது.
வனக் காரியாலயத்தில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், பீட் வன உத்தியோகத்தர்களின் அலுவலகத்தில் இருந்து வெறும் 7 கி.மீ தொலைவிலும் இக்காடழிப்பு இடம்பெற்றுள்ளது.
காடுகளைக் கண்காணிக்க அரசாங்கத்தால் நவீன 'Drone' கமரபாக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் பெருந்தொகை பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு இக்காடழிப்பிற்குத் துணைபோயுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யானைகளின் வழித்தடம் சேதம் – அதிகரிக்கும் ஆபத்து: அழிக்கப்பட்டுள்ள பாலமோட்டை மற்றும் கரஞ்சி பகுதிகள், வில்பத்து காட்டில் இருந்து ஆரம்பித்து மடு, பெரியமடு, பள்ளமடு, மூன்றுமுறிப்பு ஊடாகப் பயணிக்கும் யானைகளின் பாரம்பரிய பிரதான வழித்தடங்களாகும்.
அதிகாரிகளின் இந்த ஊழல் நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் வவுனியா பிராந்தியத்தில் பாரிய மனித - யானை மோதல்கள் ஏற்படும் உந்துதல் உருவாகியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் பூவரசங்குளம் ஒதுக்குக் காடும் இவ்வாறு அதிகாரிகளின் துணையுடன் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியாவில் வனவளத் திணைக்களத்தின் ஊழல்களைக் கண்காணித்து வரும் சமூக ஆர்வலர்கள், தங்களின் கையூட்டு மற்றும் திருட்டுக்களை மறைக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் முக்கிய 'மறைகரங்கள்' குறித்த அனைத்து ஆதாரங்களையும் உரிய உயர்மட்ட அதிகாரிகள் கோரும் பட்சத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே