பிரபாகரனை அழித்த நாட்டில் டெங்குவை ஒழிக்க முடியவில்லை என்றால் அது அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகிறது - அசேல சம்பத்!
பிரபாகரன் மற்றும் அவரது கொடூரமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக ஒழித்த இந்த நாட்டில், டெங்கு நுளம்பை ஒழிக்க முடியாமல்போயுள்ளமை ஒட்டுமொத்த நிர்வாகத்தினதும் இயலாமையையே காட்டுகின்றது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தனியார் ஆய்வகங்களின் டெங்கு பரிசோதனை கட்டணங்களை உடனடியாகக் குறைப்பதற்கும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிக தீவிரமாக அதிகரித்துள்ளது.
தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக தற்போது 1200 ரூபா வரை மிக அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. சாதாரண கிராமப்புற மக்களின் அன்றாட வருமானம் 1500 முதல் 2000 ரூபாவாக மாத்திரமே இருக்கும் நிலையில், ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்ய வேண்டுமாயின் இந்த கட்டணத்தை அவர்களால் எவ்வாறு செலுத்த முடியும்?
எனவே, ஊழல்வாதிகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தையோ அல்லது பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட பணத்தையோ பயன்படுத்தி இந்த டெங்கு பரிசோதனைக்கான செலவுகளை ஈடுசெய்ய முடியும் என நாம் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைக்கின்றோம்.
அரசாங்கமும் தனியார் மருத்துவமனைகளும் தனியார் பரிசோதனைக்கூடங்களும் இந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து, இந்த 1200 ரூபா கட்டணத்தை உடனடியாக 600 அல்லது 700 ரூபா என்ற எல்லைக்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்க மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை செய்வதற்கு சென்றால், முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால் தனியார் துறையில் சில மணித்தியாலங்களில் அறிக்கை கிடைக்கின்றது. எனவே அரசாங்க மருத்துவமனைகளில் இந்த டெங்கு பரிசோதனைகளை மிகவும் விரைவுபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உடனடியாக உருவாக்க வேண்டும்
அத்துடன், எதிர்க்கட்சியினர் வெறுமனே அரிசி, கஞ்சி அல்லது பொருட்களை விநியோகிக்கும் அரசியலில் ஈடுபடாமல், தனியார் மருத்துவமனைகளில் இந்த டெங்கு பரிசோதனை கட்டணங்களை குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்” என்றார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே