புதிய கூட்டணி வேடிக்கையானது: வை.எல்.எம். யூசுப் சாடல்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ள நிலையில், அக்கூட்டணியின் தலைவர்களுக்கு சமத்துவ மக்கள் முன்னணியின் தலைவரும், வைத்திய சட்டத்தரணியுமான வை.எல்.எம். யூசுப் பகிரங்க விவாத சவால் விடுத்துள்ளார்.
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், "1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் ஆயுத முனையில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டவிரோதமான கட்டமைப்பே இந்த உப செயலகம் ஆகும்.
நிர்வாக ரீதியாக அது ஒரு உப செயலகமாகக் கணிக்கப்பட்டாலும், அதனைச் சட்டவிரோதமான முறையில் 'வடக்கு செயலகம்' என்று பெயரிட்டு, முஸ்லிம்களுடைய கல்முனை நகரை இரண்டாகப் பிரித்து தமிழ் மக்களுக்குத் தாரை வார்ப்பதற்கு தமிழரசு கட்சியின் முக்கிய பொறுப்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றுகளில் வாதாடி வருகிறார்" எனக் குற்றம் சாட்டினார்.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் போன்ற தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய நீண்டகால நிர்வாக மற்றும் நில உரிமைப் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எந்தவொரு முறையான தீர்வும் பெற்றுத்தரவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், தங்களது சொந்தப் பகுதிப் பிரச்சினைகளையே தீர்க்க முடியாதவர்கள் எவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ச்சியாக இனம், மதம் மற்றும் பிரதேசவாத அரசியலை முன்னெடுத்ததன் காரணமாக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த கட்சிகள், எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்தே இவ்வாறான புதிய வடிவங்களில் கூட்டணி என்ற பெயரில் மக்களை ஏமாற்ற முற்படுவதாக அவர் சாடினார்.
இந்த விவகாரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக, புதிய கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களும் தயாராக இருந்தால், ஆதாரங்களுடன் பொது மேடையில் திறந்த விவாதத்திற்கு வரலாம் எனவும், மக்கள் முன்னிலையில் உண்மைகளை நிரூபிக்க தாம் தயாராக இருப்பதாகவும் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் மேலும் சவால் விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே