நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள்!

#SriLanka #Lanka4 #ADDA #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள்!

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் அவர்களின் ஒருங்கிணைப்பில், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15.07.2026) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்கள் கலந்துகொண்டு, நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி, போக்குவரத்து மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பல்வேறு முக்கிய முன்மொழிவுகளை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி, நிந்தவூர் பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் முன்மொழிவுகள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

1. நிந்தவூர் 05 மற்றும் 17 ஆம் பிரிவுகளிலுள்ள மௌலானா வீதியை (1ஆம் குறுக்குத் தெருவிலிருந்து 3ஆம் குறுக்குத் தெரு வரை) கார்பட் வீதியாக புனரமைத்தல்.

2. நிந்தவூர் 05 ஆம் பிரிவில் 3ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கடற்கரை 2ஆம் வீதி வரையிலான குடியிருப்புப் பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் கிட்டங்கி வீதியூடாக வடிகால் அமைத்து, அதனை நயீம் பள்ளிவாசல் வடிகாலுடன் இணைத்தல்.

3. நிந்தவூர் 09 ஆம் பிரிவில் முன்பள்ளி பாலர் பாடசாலை அமைத்தல்.

4. மினா, ஜேர்மன் மற்றும் அல்-சஹிதா பாடசாலைகளை மையப்படுத்தி பொது நூலகம் அமைத்தல்.

5. நிந்தவூர் 23 ஆம் பிரிவில் பெரிய பாலத்திற்கு வடக்குப் பகுதியில் பிரதான வீதியிலிருந்து கடற்கரை வீதி வரை 1.2 கிலோமீற்றர் வீதியை கொங்கிரீட் பாதையாக புனரமைத்தல்.

6. 3ஆம் குறுக்குத் தெரு – கிட்டங்கி வீதி சந்தியிலிருந்து தெற்குப் பகுதி வீதியை கொங்கிரீட் வீதியாக புனரமைத்தல்.

7. 2ஆம் குறுக்குத் தெரு – அலியான்ட் சந்தியிலிருந்து தெற்குப் பகுதி வீதியை கொங்கிரீட் வீதியாக புனரமைத்தல்.

8. GPS வீதியை புனரமைத்தல்.

9. 3ஆம் குறுக்குத் தெரு புனரமைப்பில் தாமதம் ஏற்பட்டால், APC வீதியின் உசனார் சந்தியை தற்காலிகமாக போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைத்தல்.

10. நிந்தவூர் 21 ஆம் பிரிவிலுள்ள சாஜன் – இர்ஷாத் வீதியை மீளப் புனரமைத்தல்.

11. பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையாக உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தல்.

12. அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வித் திட்டத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை அமைத்தல்.

13. வெட்டுவாய்க்கால் வீதியில் காரைதீவு – நிந்தவூர் உள் பாலத்திற்கு கிழக்கே காணப்படும் வீதி தாழ்வை நிரந்தரமாக சீரமைத்து, நிறுத்திவைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பணிகளை முழுமையாக பூர்த்தி செய்தல்.

14. வெட்டுவாய்க்கால் வீதியிலிருந்து வெளவாளோடை (கடற்கரை வீதி) வரை 5 கிலோமீற்றர் கார்பட் வீதி அமைத்தல்.

15. இமாம் கஸ்ஸாலி பாடசாலை வீதியில் 2 கிலோமீற்றர் கார்பட் வீதி அமைத்தல்.

16. நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வடிகால் அமைத்து, மண் நிரப்பி உயர்த்தி முறையாக செப்பனிடல்.

மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, குறித்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை அனுப்பி, தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்கள், நிந்தவூர் மக்களின் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யும் இத்திட்டங்கள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியதுடன், அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4