வெளிநாட்டு வாழ் இலங்கை மாணவர்களுக்கு தனி பல்கலைக்கழக ஒதுக்கீடு கோரி பிரதமரிடம் முன்மொழிவு.
வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் இலங்கை புலம்பெயர் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் தனி ஒதுக்கீடு வழங்கக் கோரி முன்மொழிவு ஒன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
SLBPC தலைவர் கலாநிதி மொஹமட் ரிஸ்லான், SLCC தலைவர் துலிப் லியனகே மற்றும் SLCBF தலைவர் அஜித் ஆகியோர் இணைந்து வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் சார்பில் இந்த முன்மொழிவை சமர்ப்பித்தனர்.
தற்போது வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 4.5 சதவீத வெளிநாட்டு மாணவர் ஒதுக்கீட்டின் கீழ் ஏனைய வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுடன் இணைத்து பரிசீலிக்கப்படுவதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக, தற்போதுள்ள 4.5 சதவீத ஒதுக்கீட்டிற்குள் இலங்கை புலம்பெயர் மாணவர்களுக்கென 3 சதவீத தனி ஒதுக்கீட்டை வழங்குமாறும், திறமை அடிப்படையில் கட்டண விலக்கு மற்றும் நியாயமான கட்டண முறையை அறிமுகப்படுத்துமாறும் முன்மொழிவில் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச் சுமையின்றி நடைமுறைப்படுத்தக்கூடிய இந்த யோசனை, நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயனளிக்கும் என முன்மொழிவை சமர்ப்பித்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே