வலி. வடக்கு: காணிகளை விடுவிக்கக் கோரி 13வது வாரமாக இராணுவ பங்களா முன்னால் மக்கள் போராட்டம்!
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமொண்டோ" (Commando) பங்களாவிற்கு முன்பாக 13வது வாரமாகவும் தொடர்ச்சியாக இந்த அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வலி. வடக்கு பலாலி மற்றும் மயிலிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் போர்ச் சூழல் காரணமாகத் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அன்று முதல் இன்று வரை, சுமார் 36 வருடங்களாக அவர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இப்பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறாமல் தொடர்ந்தும் அதனை உயர்பாதுகாப்பு வலயங்களாகவே தக்கவைத்துள்ளனர்.
மயிலிட்டி மற்றும் பலாலிப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் சுமார் 650 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளே இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ளன.
பல வருடங்களாகப் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் தமக்கான தீர்வு கிடைக்காத நிலையிலேயே, காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்து, அதனைத் தற்போதும் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே