பொது மக்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்ட றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
மதிப்பிற்கும் உரிய பொதுமக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்னால் கூறப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்டு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் தொடர்பாக பின்வரும் விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவையாவன,
1. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தொடர்பாக
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து நான் எனது வருத்தத்தை பதிவு செய்திருந்தேன். மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் சார்பில் கேள்விகளை முன்வைக்கும் போது, அதற்கான உரிய விளக்கங்களையும் பதில்களையும் அரச அதிகாரிகள் வழங்குவது நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
2. எனது முகநூல் பதிவு தொடர்பான தவறான விளக்கங்கள்
எனது முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு, எனக்கும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும், கௌரவ கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை நான் விமர்சித்ததாகவும் சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை. அதேபோல், கௌரவ அமைச்சர் அவர்களுடனோ அல்லது எனது கட்சியுடனோ எந்தவித கருத்து முரண்பாடோ அல்லது அரசியல் பிரச்சினையோ இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
3. கூட்ட ஒழுங்கும் மக்கள் நலனும்
பொதுவாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு போன்ற முக்கியமான கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கூட்டத்தை இடைநடுவில் விட்டு வெளியேறுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதே எனது கருத்தாகும்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த நிலையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் அனுமதிகள் அன்றைய தினம் பரிசீலிக்கப்படாமல் போனமை குறித்து நான் கவலை வெளியிட்டிருந்தேன்.
4. ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் அவசியம்
மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கேள்விகள் தொடர்பான விடயங்கள் இயன்றவரை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான தரவுகளுடன் முழுமையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவதற்கு அது உதவியாக இருக்கும் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இது கேள்வி கேட்கும் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல; மாறாக, பயனுள்ள நிர்வாக கலந்துரையாடலை உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை ஆலோசனையாகும்.
5. சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்
கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான இடங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
6. DCC கூட்டங்கள் விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டும்
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெறுவது மிகவும் அவசியமானது.
மாவட்ட அபிவிருத்தி பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி, பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயற்படுவது நம் அனைவரின் கடமையாகும். நன்றி
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே