அநுர அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முயல்கிறது - சஜித் குற்றச்சாட்டு!
திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (19) இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறை தொடர்பாக சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட பல உடன்படிக்கைகளும் இணக்கப்பாடுகளும் காணப்படுகின்றன.
மெசபடோமியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானிய யுகங்கள் முதல் மாக்னா கார்ட்டா வரை, மத்திய கால இங்கிலாந்தின் பொதுச் சட்ட உருவாக்கம், 1787 அமெரிக்க அரசியலமைப்பு, 1948 மனித உரிமைகள் பிரகடனம், 1966 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனம் மற்றும் 1985 நீதித்துறை சுதந்திரம் தொடர்பான அடிப்படை விழுமியங்கள் போன்ற பல முற்போக்கான சட்டப் படிகள் வரலாற்றில் எடுக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகார பரவலாக்கம் மற்றும் இவ்வதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் மூலமுமே ஜனநாயகம் பலம்பெறுகின்றது. இந்த ஜனநாயகக் கட்டமைப்பின் மூலமே அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டன.
நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம் வலுப்பெறும். சர்வதேச கொள்கைக் கோட்பாடுகள் நமது நாட்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிலருக்கு இந்த சர்வதேச கோட்பாடுகள்,கொள்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நினைவுக்கு வந்தாலும், ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் அந்த அதிகார மையங்களை உறுதிப்படுத்தும்போது மறந்துவிடுகின்றனர்.
இன்று வரை உயர் நீதிமன்றங்களில் பல நீதியரசர்களை நியமிக்க முடியும் என்று இருந்த போதிலும் அந்த நியமனங்களைச் செய்யாமல் இருக்கின்றனர். நீதியரசர்களை நியமிக்காதிருப்பதே அடிப்படை உரிமைகள் மீறலாகவும் நீதித்துறைக்கு செய்யப்படும் முறையற்ற அழுத்தமாகவும் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே