மாகாண பாடசாலைகளின் மின்சாரக் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை

#SriLanka #School #Electricity Bill #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மாகாண பாடசாலைகளின் மின்சாரக் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த மின்சாரக் கட்டண கொடுப்பனவுகளில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வை நீக்கி, மாகாண பாடசாலைகளுக்கான கொடுப்பனவையும் தேசிய பாடசாலைகளுக்கு நிகராக அதிகரிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு விடயத்தைக் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கு முன்னர் மாதாந்த மின்சாரக் கட்டண கொடுப்பனவாக 12,000 ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய அத்தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாகாண பாடசாலைகளுக்கு 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் அடிப்படையிலேயே தற்போதும் மின்சாரக் கட்டண கொடுப்பனவு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, மாதாந்தம் 1AB பாடசாலைகளுக்கு 1,500 ரூபா, 1C பாடசாலைகளுக்கு 1,200 ரூபா, 

Type II பாடசாலைகளுக்கு 800 ரூபா மற்றும் 

Type III பாடசாலைகளுக்கு 400 ரூபா மாத்திரமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலில் மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இந்தத் தொகை போதுமானதாக இல்லை. 

இதனால் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கு மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் நிலையில், மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள 1AB பாடசாலைகளுக்குக் கூட 1,500 ரூபா மாத்திரம் வழங்கப்படுவது பாரிய ஏற்றத்தாழ்வாக உள்ளதாக உதுமாலெப்பை எம்.பி. சுட்டிக்காட்டவுள்ளார்.

எனவே, தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண கொடுப்பனவுக்கு நிகரான தொகையை மாகாண பாடசாலைகளுக்கும் வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தவுள்ளார்.

மாகாண பாடசாலைகளின் மின்சாரக் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4