மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
மட்டக்களப்பு – வெல்லாவெளி, 35ம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 7 பொலிஸார் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரை பொல்லுகளால் தாக்கி, முற்றுகை நடவடிக்கையைத் தடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இரு பொலிஸார் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே