கரிபா ஏரியில் பெருந்துயரம்: படகு விபத்தில் 92 பேர் பலி!
ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 18 சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து ஏரியில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு படகுகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட சுழியோடிகள் அடங்கிய மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான படகில் அதிகபட்சமாக 90 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய திறன் இருந்ததாகவும், ஆனால் விபத்து இடம்பெற்றபோது அதில் சுமார் 153 பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்தமை விபத்தின் தீவிரத்தை அதிகரித்திருக்கக்கூடும் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளை, கரிபா ஏரியில் நிலவிய பலத்த காற்று மற்றும் சுழல் அலைகள் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் ஸிம்பாப்வே வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான படகு விபத்துகளில் ஒன்றாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள ஜனாதிபதி எமர்சன் ம்னங்கக்வா, நாட்டின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகள் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், படகுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி பயணிகளை ஏற்றுதல், பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் நீர்வழிப் போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் கடுமையான கண்காணிப்பு தேவை என்ற கோரிக்கையும் இந்த விபத்தைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே