மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் உருவான புதிய அரசியல் கட்சி

#LANKA4 #Youngster #parties #Politician #Malayagam #Politics #L4
Prasu
1 hour ago
மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் உருவான புதிய அரசியல் கட்சி

“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான அரசியல் பாதையொன்றை உருவாக்கியிருப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என மலையக சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான மலையக அரசியல் வரலாற்றில் பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. 

அவற்றில் பல காலப்போக்கில் காணாமல் போயுள்ள நிலையில், ஓரிரு கட்சிகள் மாத்திரமே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.

ஆனால், மலையக இளைஞர்களால் முற்றுமுழுதாக சுயாதீனமாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடையாளத்தை இதுவரை எவரும் உருவாக்கவில்லை என்பதே எமது பார்வை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாய் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளின் பின்னணியில் புதிய கட்சிகளை உருவாக்கிய வரலாறுகளையே நாம் அதிகமாகக் காண்கிறோம்.

அதேபோன்று, வெளிநாடுகளில் வாழும் மலையக சமூக ஆர்வலர்களிடம் தமது அரசியல் செயற்பாடுகளை முன்வைத்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளும் கடந்த காலங்களில் காணப்பட்டுள்ளன.

மலையகத்திற்கு தனித்துவமான அரசியல் கட்சி ஒன்று அவசியம் என்ற கருத்து நீண்ட காலமாகவே பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. 

ஆனால், அந்தக் கருத்தை நடைமுறையில் கொண்டு வந்து, எந்தவித அரசியல் பின்புலத்தையும் சாராமல் புதிய பாதையை உருவாக்குவதற்கு எவரும் முன்வராதது எமக்கு வருத்தமளித்த விடயமாகும்.

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தள மோகத்தில் சிக்கி, ஆரோக்கியமான சமூக விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை என்றும், மலையகத்தின் எதிர்கால மாற்றம் தொடர்பில் அடிப்படை அரசியல் சிந்தனையற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அந்தப் பார்வையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4