கிளிநொச்சியில் இராணுவத்தின் தேநீர்க்கடைக்கு பாதுகாப்பு அவசியமா? - சமூக செயற்பாட்டாளர் கேள்வி

#SriLanka #Kilinochchi #government #LANKA4 #land #activists #Military #L4
Prasu
1 hour ago
கிளிநொச்சியில் இராணுவத்தின் தேநீர்க்கடைக்கு பாதுகாப்பு அவசியமா? - சமூக செயற்பாட்டாளர் கேள்வி

கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணியை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் நகைப்பிற்குரியதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.

மேலும், “கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஊடகவியலாளர் சங்கத்திற்குரிய காணியை விடுவித்து, அந்தக் காணியை உரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி செயலகம், ‘பாதுகாப்பு காரணங்களினால் குறித்த காணியை விடுவிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் பதில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. குறித்த காணியில் தற்போது இராணுவத்தினர் தேநீர்க்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தத் தேநீர்க்கடையை அகற்றுவதால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வாறான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு தேநீர்க்கடையைப் பாதுகாப்பதுதான் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவமா? அல்லது ஊடகவியலாளர்களுக்குரிய காணியைப் பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் அவர்களிடம் மீள ஒப்படைப்பதே அரசின் பொறுப்பா? என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது ஊடகப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் பிரச்சினைகள், நிர்வாகத் தவறுகள், சமூக அநீதிகள் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

ஆனால், இவ்வளவு காலமாகியும் கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கென உரிய அலுவலக வசதியோ, செய்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிரந்தர இடவசதியோ இல்லாத நிலை காணப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் வீதியோர தேநீர்க்கடைகளிலும், பொது இடங்களிலும் நின்றபடியே செய்திகளைத் தயாரித்து ஊடக நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய துரதிர்ஷ்டமான நிலை தொடர்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், ஊடகவியலாளர்களுக்கென ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணியில் இராணுவத்தினர் தேநீர்க்கடை நடத்துவதும், அந்தக் காணியை மீள வழங்க முடியாது என ‘பாதுகாப்பு காரணங்களை’ முன்வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

ஊடகவியலாளர்களுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா? ஆனால் இராணுவத்தின் தேநீர்க்கடைக்கு மட்டும் பாதுகாப்புத் தேவைப்படுகிறதா? என்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும்.

மேலும், குறித்த காணி எந்த அடிப்படையில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளது, அதற்கான சட்டபூர்வ அனுமதி என்ன, காணியைத் தொடர்ந்து இராணுவப் பயன்பாட்டில் வைத்திருப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட காரணங்கள் என்ன என்பன தொடர்பாகவும் உரிய அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்களின் தொழில்சார் பணிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது ஜனநாயக சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். சுதந்திரமான ஊடகச் செயற்பாடு ஜனநாயகத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் நிலையில், ஊடகவியலாளர்களுக்குரிய காணியை மீள வழங்குவதில் பாதுகாப்பு என்ற காரணத்தை முன்வைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் நாட்டின் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, குறித்த காணியின் உரிமை, பயன்பாடு மற்றும் தற்போதைய நிலை தொடர்பில் வெளிப்படையான விசாரணையை முன்னெடுத்து, உரிய தீர்வை வழங்க வேண்டும்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், ஊடக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்குரிய காணி ஊடகவியலாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஒரு தேநீர்க்கடையைப் பாதுகாப்பதற்காக ஊடகச் சுதந்திரத்திற்கான அடிப்படை வசதிகளை மறுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எனவே, கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் நியாயமான கோரிக்கைக்கு விரைவானதும், வெளிப்படையானதும், சட்டபூர்வமானதுமான தீர்வை வழங்க ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும்” என சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4