கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை பாதுகாப்பானதாக மாற்றக் கோரி போராட்டம்!

#SriLanka #Protest #Kilinochchi #Railway #LANKA4 #Safe #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை பாதுகாப்பானதாக மாற்றக் கோரி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை பாதுகாப்பான கடவைகளாக மாற்றக் கோரி இன்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் ஆனையிறவு முதல் இரணைமடுச் சந்தி வரையான பகுதியில் 14 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காணப்படுவதாகவும், அவற்றை பாதுகாப்பான கடவைகளாக மாற்றுவதில் நீண்டகாலமாக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அறிவியல்நகர் விடியல் கைத்தொழிற்சாலை புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி அக்சயா தினேஸ்குமார் உயிரிழந்த சம்பவமும் இதன்போது நினைவுகூரப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் ஊடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்து வருவதாகவும், வடக்கிற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான விபத்துகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதுகாப்பற்ற 14 புகையிரதக் கடவைகளையும் உடனடியாக பாதுகாப்பான கடவைகளாக மாற்றுவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் கையளித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4