இரத்தினக்கல் ஏற்றுமதி வருமானத்தை 1 பில்லியன் டொலராக உயர்த்த நடவடிக்கை
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் வருடாந்த வருமானத்தை குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்ஹெத்தி தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை, இலங்கை மாணிக்கக்கல் அகழ்வு உரிமையாளர்களின் சங்கம் மற்றும் இரத்தினக்கல் விற்பனையாளர்களின் சங்கம் ஆகியவை இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த ‘இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2026’ இரத்தினபுரி, லெல்லுபிட்டிய கிரான்ட் சில்வரே ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான விஜித்த ஹேரத் மற்றும் சுனில் ஹந்துன்ஹெத்தி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதி அமைச்சர் ஜுனியர் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டாரகுமார மற்றும் வைத்தியர் ஜனக்க சேனாரத்ன, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் சம்பா ஜானகி ராஜரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தகர்களும் கண்காட்சியில் பங்கேற்றனர். இதன்போது இரத்தினக்கல் அகழ்வு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இலங்கையின் இரத்தினக்கல், தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் வருமானம் கடந்த பல ஆண்டுகளாக 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது நாட்டின் இரத்தினக்கல் வளத்துடன் ஒப்பிடுகையில் போதுமான வருமானம் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச சந்தைக்கு செல்லக்கூடிய பெறுமதிமிக்க இரத்தினக்கற்கள் நாட்டில் அதிகளவில் இருப்பதால், இந்தத் துறையின் வருமானத்தை குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு என தெரிவித்தார்.
இதற்காக உள்நாட்டில் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் விற்பனையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் இரத்தினக்கற்களை கொள்வனவு செய்யும்போது அறவிடப்படும் வற் (VAT) வரி தொடர்பான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இரத்தினக்கல் ஏற்றுமதியின்போது அறவிடப்படும் வற் வரியை குறைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் விரைவில் கலந்துரையாடி முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்ஹெத்தி தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே