பாதுகாப்புப் படைகளின் பிரதானி (ரத்து) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
பாதுகாப்புப் படைகளின் பிரதானி (ரத்து) சட்டமூலம் நேற்று (09) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து, எவ்வித வாக்கெடுப்பும் இன்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தயாரிக்கப்பட்ட இச்சட்டமூலத்தின் வரைவு, மே 15 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 04, 2025 அன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதானி சட்டத்தை ரத்து செய்வதற்காகவே இச்சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்தது.
அதன்படி, 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதானி சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம், பாதுகாப்புப் படைகளின் பிரதானி (Chief of Defence Staff) என்ற பதவியும் இச்சட்டமூலத்தின் கீழ் ரத்து செய்யப்படவுள்ளது.
மேலும், இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் பாதுகாப்பு அமைச்சின் வசம் மாற்றப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே