ஒக்டோபரில் 3 நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா – றீச்சா பண்ணை ஏற்பாடு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றாக விளங்கும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில், “றீச்சா உணவுத் திருவிழா 2026” எனும் மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டது.
அதன்படி, 2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பாரம்பரிய உணவுகளுடன் நவீன உணவு அனுபவங்களும் ஒரே இடத்தில் வழங்கப்படவுள்ளன.
மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் பிரதான உணவு சேவையில், ஒரே டிக்கெட்டின் மூலம் பல்வேறு பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உணவுத் திருவிழா டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00 மணி முதல் றீச்சா பண்ணை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பகல் நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுகளில் பங்கேற்க தனியான டிக்கெட் தேவைப்படும். பார்வையாளர்களின் வசதி மற்றும் நிகழ்வின் ஒழுங்கான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், நாளொன்றுக்கு அதிகபட்சம் 1,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, மூன்று நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அனைத்து உணவுத் திருவிழா டிக்கெட்டுகளும் இணையவழியாக மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை பூர்த்தியான பின்னர் மேலதிக டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது. மேலும், ஒக்டோபர் 16 முதல் 18ஆம் திகதி வரை உணவுத் திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே றீச்சா ஒருங்கிணைந்த பண்ணைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கொள்வனவு செய்த பின்னர் தனிப்பட்ட காரணங்களால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் பணம் மீள வழங்கப்படமாட்டாது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் வளாகத்தின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே