கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு
அமெரிக்க R&B பாடகர் Ne-Yo-வின் கொழும்பில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் வழக்கையும் Ne-Yo-வின் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்காக சுமார் 300,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்ட போதிலும் Ne-Yo நிகழ்ச்சியை நடத்தவில்லை என ஏற்பாட்டாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என பாடகர் தரப்பு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிகழ்ச்சிக்கு முன்னர் கலைஞருக்கான முழுமையான கட்டணத்தையும் பயணச் செலவுகளையும் ஏற்பாட்டாளரே செலுத்த வேண்டியிருந்ததாக Ne-Yo-வின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஏற்பாட்டாளருக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், அவை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி வசதி ஏற்பாட்டாளரிடம் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து, Ne-Yo நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே செலுத்திய 284,460 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை மீளப் பெறுவதுடன், மேலதிக இழப்பீடும் கோரி ஏற்பாட்டாளர் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சுற்றுப்பயணக் கட்டணங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான சர்ச்சையே நிகழ்ச்சி ரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே