சந்தையில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து விசேட சோதனை
சந்தையில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் (baby diapers) தொடர்பில் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த டயப்பர்கள் (baby diapers) பயன்பாட்டின் போது கிழிந்து போவது மற்றும் பழுதடைவது குறித்து நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாடுகளை தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சிறப்பு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட டயப்பர்களின் விநியோகச் சங்கிலியைத் தடமறிந்த அதிகாரிகள், கொட்டாவ மற்றும் பேட்டை (Pettah) ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு வணிக நிறுவனங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்கள் ஏதுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகளுக்கான டயப்பர்க இனங்காணப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விரு நிறுவனங்கள் தொடர்பிலும் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரணை செய்த நீதவான் கொட்டாவவில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாய் அபராதமும், பேட்டையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் போன்ற சுகாதாரப் பொருட்களின் உறையில் குறிப்பிடப்பட வேண்டிய கட்டாயத் தகவல்களான இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை நுகர்வோர் கவனமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கேட்டுக்கொண்டுள்ளது.