தொடர் நெருக்கடிகள் இலங்கையர்களின் மனநலத்தில் ஆழமான தாக்கம் – ஆய்வு

#SriLanka #Health #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தொடர் நெருக்கடிகள் இலங்கையர்களின் மனநலத்தில் ஆழமான தாக்கம் – ஆய்வு

இலங்கை தொடர்ச்சியாக எதிர்கொண்ட போர், கொவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, மக்களிடையே பல அடுக்குகளைக் கொண்ட மன உளைச்சல் மற்றும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையில் அனர்த்தங்களுடன் தொடர்புடைய மன உளைச்சல் மற்றும் இழப்புகளை எதிர்கொள்ளுதல்” (Addressing Disaster-Related Trauma and Loss in Sri Lanka) என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அனர்த்தங்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்களை தனித்தனி சம்பவங்களாகப் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிதிலைமாறன் தெய்வேந்திரன் மேற்கொண்ட இந்த ஆய்வில், 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 25 ஆய்வுக் கட்டுரைகள், அரச ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

ஆய்வின் அடிப்படையில், புதிய நெருக்கடிகள் ஏற்படும் போது, கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட போர், இடம்பெயர்வு, அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வந்து, உணர்வுரீதியான பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன உளைச்சல் என்பது உயிரிழப்பு மற்றும் உடல் காயங்களுடன் மாத்திரம் மட்டுப்படவில்லை எனவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 

வீடுகள், வாழ்வாதாரங்கள், சமூக உறவுகள், நிதிப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையின் நிலைத்தன்மை போன்றவற்றை இழப்பதும் மக்களின் மனநிலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றம், மனச்சோர்வு, அச்சம், உணர்வுரீதியான சோர்வு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முக்கிய உளவியல் தாக்கங்களாக ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது பலர் குடும்ப ஆதரவு, மத நடைமுறைகள் மற்றும் சமூக வலையமைப்புகளைச் சார்ந்திருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. 

சிலர் சமூகத் தனிமை, மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் தமது உணர்வுகளைத் தவிர்த்தல் போன்ற முறைகளையும் கையாள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனநல உதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு தடைகள் காணப்படுவதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மனநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூகக் களங்கம், நிதிச் சிரமங்கள், பயிற்சி பெற்ற நிபுணர்களின் பற்றாக்குறை மற்றும் அனைத்து பகுதிகளிலும் மனநலச் சேவைகள் சமமாகக் கிடைக்காமை ஆகியவை முக்கிய சவால்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஏற்கனவே நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்தச் சவால்கள் மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே, இலங்கையில் அனர்த்தங்களுக்கு வழங்கப்படும் பதில் நடவடிக்கைகள் உடனடி உடல் ரீதியான பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்களை நிவர்த்தி செய்வதுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது என ஆய்வு வலியுறுத்துகிறது.

மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் மற்றும் இழப்புகளையும் கருத்திற்கொண்டு, நீண்டகால மனநல மற்றும் உளசமூக ஆதரவுகளை வழங்குவதுடன், சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் கலாசாரப் பின்னணிக்கு ஏற்றதுமான ஆதரவு அமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும் என ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!