31 நாடுகளுடன் 410 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அமெரிக்கா
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தை, குடியேறிகளை அவர்கள் சாராத நாடுகளுக்கு நாடு கடத்தும் தனது திட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றியுள்ளதாக ஒரு புலனாய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
குடியேறிகளை மூன்றாம் நாடுகளுக்கு நாடு கடத்த உதவும் வகையில் 31 நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா குறைந்தது 410 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
சுமார் 15 ஊழியர்களைக் கொண்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 'மறு குடியேற்ற அலுவலகம்' (Office of Remigration) மூலம் இந்த ஒப்பந்தங்கள் கையாளப்படுகின்றன. அமெரிக்க இராஜதந்திரி கிறிஸ்டியன் எர்ஹார்ட் (Christian Ehrhardt) இதன் தலைவராகச் செயல்படுகிறார்.
எர்ஹார்ட் ஜூன் மாதத்தில் ஐவரி கோஸ்ட், காம்பியா, கினியா-பிசாவ், டோகோ மற்றும் கேபான் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் குடியேறிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்க அவர் அந்நாட்டு அரசு அதிகாரிகளைச் சந்தித்தார்.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் அனுப்பப்படும் குடியேறிகள், அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் குடிமக்கள் அல்ல. ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, குடியேறிகள் கோஸ்டாரிகா மற்றும் ஆப்பிரிக்க நாடான எஸ்வாடினி (Eswatini) ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இதில் சீனா, ரஷ்யா, ஈரான், ஆப்கானிஸ்தான், வியட்நாம், லாவோஸ், கியூபா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
மேலும், சம்பந்தப்பட்ட நாடுகளில் அகதிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்காக, சர்வதேச குடியேற்ற அமைப்புக்கு (IOM) 179 மில்லியன் டாலரும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமைக்கு (UN Refugee Agency) 124 மில்லியன் டாலரும் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.