பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களை கையாள புதிய சட்டம் அறிமுகம் - வர்த்தமானியில் வெளியீடு
இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பிலான புதிய சட்டமூலம் ஒன்று அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட சில செயல்கள் உட்பட, பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்களிலிருந்து நாட்டின் தேசியப் பாதுகாப்பையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டம் முன்மொழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியே பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளுக்கு இலங்கையின் நிலப்பரப்போ அல்லது அதன் மக்களோ பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்கள் அல்லது அது தொடர்பான குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், பிடித்துக்கொள்ளுதல், கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் ஆகியவற்றுக்கான நடைமுறைகளையும், அத்துடன் அவர்களை விசாரணைக்கு உட்படுத்துதல், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான ஏற்பாடுகளையும் இது வகுத்துரைக்கிறது.
பொதுவாக 'பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (PTA) என்று அழைக்கப்படும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்மொழிவு இம்மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவின் பேரில் இம்மசோதா வெளியிடப்பட்டதுடன், தற்போது முன்மொழியப்பட்ட சட்டமாகப் பரிசீலிக்கப்படுவதற்காக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.