“பேசி பேசி களைத்துவிட்டோம்” – மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரும் சாணக்கியன்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பாரம்பரிய மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று (23) பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக கால்நடை பண்ணையாளர்கள் பயன்படுத்தி வரும் மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பயிர்ச்செய்கை மற்றும் நில அழிப்பு இடம்பெறுவதாகவும், இதனால் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மேய்ச்சல் நிலங்களின் சட்டப்பூர்வ நிலை, ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான முழுமையான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, மேய்ச்சல் நிலப் பிரச்சினையால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், பண்ணையாளர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியன் முன்வைத்த விடயங்களுக்கு பதிலளித்த விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, அவர் முன்வைத்த விடயங்களை மறுக்கவில்லை என்றும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
“இனியும் பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதிமொழிகளுடன் காலத்தை வீணடிக்காமல், நடைமுறைத் தீர்வு வழங்க வேண்டும்” என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.