கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மருத்துவ மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
மேலும், வைத்தியசாலையின் சேவைத் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான செயற்றிட்டங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய மக்களுக்கு தரமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலையின் நீண்டகால அபிவிருத்தியை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.