மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், அப்பகுதியில் இருந்து நீர் பெறும் பல ஓடைகளிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அதிகளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால் கீழ்நோக்கி நீர் வெளியேற்றம் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கென்யோன் நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் நண்பகல் 12.15 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்த்து, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.