அனோஜனை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் கலந்துரையாடல்
கைது செய்யப்பட்டுள்ள அனோஜனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதான பள்ளிவாசலின் மௌலவி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுப்பது தொடர்பில் கூட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்காக சவுதி அரேபிய தூதரகம், இஸ்லாமிய மார்க்கத் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் சபை உள்ளிட்ட தரப்புகளின் ஊடாக இரக்கமான கோரிக்கைகளை முன்வைப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் நிறைவில், அனோஜன் விடுதலை செய்யப்பட வேண்டி சிறப்பு துவா பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மௌலவிகள், சகோதரர்கள் மற்றும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனிதநேயத்துடனும் மனித மாண்புடனும் முன்வைக்கப்பட்ட அழைப்பை ஏற்று, தொழுகையின் பின்னர் கலந்துரையாடி கூட்டு தீர்மானத்தை வெளிப்படுத்திய கிளிநொச்சி வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.