ஆலய அன்னதானத்துக்காக காலாவதியான மருந்து தெளிக்கப்பட்ட வாழைக்குலைகள் – நபருக்கு 6 மாத சிறை!
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமொன்றின் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்துக்கு வழங்குவதற்காக, காலாவதியான பழுக்கச் செய்யும் மருந்து தெளிக்கப்பட்ட வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்ற நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நீர்வேலி பகுதியில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 424 கிலோ வாழைக்குலைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையிலான குழுவினர் கைப்பற்றியிருந்தனர்.
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதும், சுமார் ஒரு வருடம் காலாவதியாகியிருந்ததுமான பழுக்கச் செய்யும் மருந்து வாழைப்பழங்களுக்கு தெளிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட வாழைக்குலைகள் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கையகப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.