யானை அச்சுறுத்தல்: மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றனவா?
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் யானை–மனித மோதலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், யானை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் போரைத்தீவுப்பற்று மற்றும் கிரான் பகுதிகள் உள்வாங்கப்படாதது ஏன்?
என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்ற கேள்வி–பதில் நிகழ்வின்போது, யானை அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், யானை கட்டுப்பாட்டு அலகு அமைத்தல் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்கப்படும் வளங்கள் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற யானை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கு ஏன் உரிய வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், யானை–மனித மோதல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பணியாற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்கள் போதுமான அளவில் வழங்கப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விடயத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் சமமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான வளங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.