நேபாளத்தில் மீண்டும் ஏற்பட்ட பேரிடர் - இருவர் மரணம்; 12 பேர் மாயம்
மோசமான வானிலை நிலவிய சூழலில், நேபாள மலைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பன்னிரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த பனிச்சரிவைத் தொடர்ந்து, நேபாளத்தின் வட-மத்திய பகுதியில் அமைந்துள்ள 7,126 மீட்டர் (23,380 அடி) உயரமான ஹிம்லுங் (Himlung) மலையிலிருந்து குறைந்தது 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் விமானம் மூலம் காத்மாண்டு விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து திரிபுவன் பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவரும் நேபாள நாட்டவர்களே என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கிய இலையுதிர் கால மலையேற்றப் பருவத்தில், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வருகை தந்து மலையேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் முகாமில் (base camp) இருந்தபோதே இந்த பனிச்சரிவு ஏற்பட்டது.