கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஆளுநர் உறுதி

#SriLanka #Governor #LANKA4 #officer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஆளுநர் உறுதி

கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (28) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கால்நடை வைத்திய அதிகாரிகளின் பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறையில் பாரபட்சம் காணப்படுவதாக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த முறையை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நடைமுறைக்கு ஏற்ற கடமைப் பட்டியல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், அலுவலகக் கடமைகள் மற்றும் வெளிக்கள சிகிச்சைப் பணிகளுக்கு ஏற்ற வகையில் வரவுப் பதிவு நடைமுறையொன்று இல்லாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக நிர்வாக மற்றும் பணிசார் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாகவும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் நா. வேதநாயகன், எந்தவொரு பிரச்சினைக்கும் கலந்துரையாடல் மூலமே தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தார். கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தீர்வு காண தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, தேவையான திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.

வருகைப் பதிவு தொடர்பில் கைவிரல் அடையாள முறையைப் பின்பற்றுவது பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு உட்பட்டது என்பதால் அதனை மீற முடியாது எனத் தெரிவித்த ஆளுநர், இருப்பினும் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன், கடமைப் பட்டியல், ஆளணி மற்றும் ஏனைய பணிசார் விடயங்கள் தொடர்பில் அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்துக்கொண்டு விரிவான கலந்துரையாடலொன்றை விரைவில் நடத்துவதற்கும் ஆளுநர் உறுதியளித்தார்.

அதிகாரிகளுக்கும் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவது அவசியம் என வலியுறுத்திய ஆளுநர், அதன் ஊடாகவே பண்ணையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கான பணிச்சூழலையும் மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!