வடக்கில் பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு – மீனவ பிரதிநிதி குற்றச்சாட்டு
வடக்கு மாகாணத்தில் பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று பிற்பகல் தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மீனவ பிரதிநிதிகள் அண்மையில் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, உள்ளூர் இழுவைமடி படகுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுவது, கடலட்டை வளர்ப்பினால் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் தாம் வலியுறுத்தியபோது, உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடித் தொழிலில் ஈடுபடுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தென்பகுதியில் வத்தளை – குண்டு பகுதியில் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் இந்தத் தொழிலுக்கு உரிய முறையில் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரையான கடற்பகுதியில் வலைகளைப் பயன்படுத்தியே இறால் பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பல ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கடலட்டை வளர்ப்புத் திட்டங்களில் ஐயர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்பட்டு சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேபோன்று, கடலில் மேற்கொள்ளப்படும் உள்ளூர் இழுவைமடி தொழிலினாலும் மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடைமுறையிலும் பல மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.