யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபேதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால், நீதிமன்றம் இவ்வழக்கை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
தெஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் 73 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.