தங்க நகைகளை கடத்திய வர்த்தகர் கைது - 3.7 மில்லியன் ரூபாய் அபராதம் விதிப்பு
நாட்டிற்குள் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்த நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பல்லேகலையைச் சேர்ந்த 51 வயதான இந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (03) காலை சுமார் 9.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் அவர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலில் நான்கு பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுள்ள தங்க நகைகளைக் கண்டறிந்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB), சந்தேக நபரை கைது செய்தனர்.
இந்தத் தங்க நகைகளின் மதிப்பு 36.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்தப் பயணியும் தங்க நகைகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று (04) அதிகாலை சுமார் 4.45 மணி வரை நடைபெற்ற முறையான சுங்க விசாரணையைத் தொடர்ந்து, அந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டதுடன், அப்பயணிக்கு 3.7 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.