தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் விலையை நிர்ணயிக்க முழு சுதந்திரம்! – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்

#SriLanka #prices #LANKA4 #Private
Abi
2 hours ago
தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் விலையை நிர்ணயிக்க முழு சுதந்திரம்! – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப எந்த விலையிலும் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் பாரிய மாற்றம் ஏற்படாத பட்சத்தில், எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் CPC எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவையும் முன்வைக்காது எனவும் தெரிவித்தார்.

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் எதிர்கொள்வதாகக் கூறப்படும் நஷ்டம் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த CPC தலைவர், அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனை உள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், குறிப்பிட்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்யுமாறு அரசாங்கம் இதுவரை தனியார் நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வமான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் தற்போது CPC நிர்ணயிக்கும் விலையை தன்னிச்சையாகப் பின்பற்றி வருவதாகவும், இதனால் நஷ்டம் ஏற்படுமாயின் தங்களுக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து எரிபொருளை விற்பனை செய்வதற்கு அவற்றுக்கு முழு சுதந்திரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சந்தையில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு மக்களுக்கு சுமையின்றி எரிபொருள் சேவையை தொடர்ந்து வழங்குவதற்கான ஆற்றல் CPCக்கு உள்ளதாகவும் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

அதன்படி, இந்த மாத இறுதி வரை மட்டுமன்றி, பெரும்பாலும் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவையும் CPC சமர்ப்பிக்காது என அவர் உறுதியளித்தார்.

மேலும், நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், எதிர்வரும் காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் கையிருப்பை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!