நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து பணியாற்ற இடையூறு என பெண் ஊழியர் குற்றச்சாட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 10 வருடங்களாக சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் மற்றும் காட்சட்டை அணிந்து பணியாற்றியதாகக் கூறப்படும் பெண் மருத்துவ உதவியாளர் பாதிமா ரிப்தியா, அண்மையில் நாகொட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
நாகொட வைத்தியசாலை நிர்வாகத்தினால் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவது தொடர்பில் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், அதற்கு எதிராக சுகாதார அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது முறைப்பாட்டுக்கு சாதகமான தீர்வு கிடைக்காத நிலையில், தன்னை கல்லஸ்ஸ வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், குறித்த இடமாற்றத்தை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, நாகொட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் தன்னை பணியமர்த்தியுள்ளதாகவும் பாதிமா ரிப்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஹிஜாப் அணிந்து வைத்தியசாலை வளாகத்தில் பணியாற்றியதன் காரணமாகவே தன்னை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் பணியமர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகளால் அவதியுற்று வருவதாகவும், தற்போது சத்திரசிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதால் மேலதிக அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் நாகொட வைத்தியசாலை நிர்வாகம் அல்லது சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளியாகவில்லை.