முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு: உடனடி தீர்வு கோரும் ரவிகரன் எம்.பி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறல்களால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், யானை–மனித மோதலுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அரசாங்கம் உடனடி தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (07.10.2026) உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி, கேப்பாப்பிலவு – புலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு – கோம்பாவில் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், விவசாய உற்பத்திகள் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கணக்கில் மக்கள் பராமரித்து வளர்த்த பயிர்கள் ஒரே இரவில் காட்டுயானைகளால் அழிக்கப்படுவதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
யானை வேலி அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டின் பின்னரே முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதுவரையான காலப்பகுதியில் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் யார் பொறுப்பு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, நிரந்தரத் தீர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக பிரதேச மட்டத்தில் உடனடி தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, யானை–மனித மோதலை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.