முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள் – 2027இல் நடவடிக்கை

#SriLanka #PrimeMinister #NorthernProvince #Mannar #Digital #Mullaitivu #education #Harini Amarasooriya
Riya
12 hours ago
முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளநிலையங்கள் – 2027இல் நடவடிக்கை

முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் கணினிகள் மற்றும் பல்லூடக எறிவைகள் அதிகளவில் செயலிழந்துள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84 சதவீத கணினிகளும், 82.76 சதவீத பல்லூடக எறிவைகளும் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் பின்தங்கிய நிலை எனவும், இவ்வாறான சூழலில் பாடசாலைகளில் கணினிமயப்படுத்தப்பட்ட கற்பித்தலை வினைத்திறனுடன் முன்னெடுப்பது சிரமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் இதுவரை கணினி வளநிலையங்கள் இல்லாத நிலையில், இந்த இரண்டு கல்வி வலயங்களுக்கும் 2027ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப வளநிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ரவிகரன் எம்.பி. முன்வைத்த கேள்வி நியாயமானது என தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் போதுமான கணினி வளநிலையங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுகளின்போது, 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில பகுதிகளுக்கு புதிய கணினி உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

தற்போது பல இடங்களில் பழைய உபகரணங்களே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கல்வித் துறைக்காக ஐந்தாண்டு கால செயற்றிட்டமொன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாகவும், அதனை 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் திருத்தக்கூடிய கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், திருத்த முடியாத நிலையில் உள்ள உபகரணங்களுக்குப் பதிலாக புதிய உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

மேலும், பாடசாலைகளில் இருமொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன், குறித்த கல்வி வலயங்களில் உள்ள வளநிலையங்களையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஐந்தாண்டு செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!