இலங்கை டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல் - புதிய கேப்டன் நியமனம்
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் தனஞ்சய டி சில்வா, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த தலைமுறையினர் பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இது என்று கூறி அவர் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதேவேளையில், தேசிய அணிக்காகத் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தலைமைப் பொறுப்பு அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது உண்மையான கருத்து," என்று தேர்வு கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம், தேசிய ஆண்கள் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக குசல் மெண்டிஸை நியமித்துள்ளது.
SLC தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அணியின் ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20I) போட்டிகளுக்கான கேப்டனாகச் செயல்பட்டு வரும் மெண்டிஸ், இதுவரை 75 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 343 சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.