புளியங்குளம் கோர விபத்து: இளம் தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் பலி; தாய் படுகாயம்!
வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் தந்தையும் ஒரு வயதை அண்மித்த குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து புளியங்குளம், சமளங்குளம் பகுதியில் உள்ள வயலில் நெல் விதைப்புப் பணிக்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகியோர் பயணித்துள்ளனர்.
இதன்போது, 207ஆவது மைல்கல் பகுதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப் பண்ணைக்கு முன்னால் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் புளியங்குளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்தைக் கண்ணுற்ற பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்களில் இருவர் மயக்கமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை இம்மாதம் 23ஆம் திகதி தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.