முதியோர் நலன் மற்றும் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை ஊக்குவிக்கும் சைக்கிள் சவாரி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பம்!
ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி, இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது.
முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கமான 1890 தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ‘Clean Sri Lanka’ திட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் முதியவர்கள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் இச்சைக்கிள் சவாரி முன்னெடுக்கப்படுகிறது.
பத்து பேர் கொண்ட குழுவினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து தமது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மொத்தம் 1,890 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பத்து முதியவர்கள் இச்சைக்கிள் சவாரியில் பங்கேற்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர் 80 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சைக்கிள் சவாரியில் பங்கேற்ற முதியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முதியோரின் நலன், சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தும் நோக்கில் இச்சைக்கிள் சவாரி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.