இந்திய வீடமைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய விசேட கலந்துரையாடல்!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 10,000 இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து, வீடுகளை விரைவில் பயனாளிகளிடம் கையளிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில், அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம், பெருந்தோட்ட மனிதவள அறக்கட்டளை , மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், JEDB, SLSPC மற்றும் எல்கடுவ பிளாண்டேஷன் உள்ளிட்ட பிரதான பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளைத் துரிதப்படுத்தி, வீடுகளை விரைவில் பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.