உள நலமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்!
உலக உள நல தினத்தை முன்னிட்டு, உள நலத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவினால் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் பி. ஜெயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே உள நலத்தைப் பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான சைக்கிள் ஓட்டம், பிரதான வீதி வழியாகத் தம்பிலுவில் மத்திய சந்தையைச் சென்றடைந்து, பின்னர் திருக்கோவில் பொலிஸ் நிலைய வீதி மற்றும் விநாயகபுரம் மத்திய வீதி ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
“உண்மையான அனுபவங்களுக்குச் செவிமடுப்போம்; உண்மையான குரல்களுடன் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!” என்ற கருத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வு, உள நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்குச் செவிசாய்த்து, அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது.
மேலும், உள நலம் தொடர்பான தவறான புரிதல்களையும் புறக்கணிப்பையும் நீக்கி, ஒருவருக்கொருவர் அக்கறையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.