மழையுடன் கூடிய வானிலையே தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கைக்கு அண்மையில் வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற அதிகரித்த மழைவீழ்ச்சி தொடரக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பிற்கு அமைய, வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.