இலங்கை – பங்களாதேஷ் உறவில் புதிய முன்னேற்றம்; வர்த்தகம், முதலீடு குறித்து பேச்சு!
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் விவசாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளைப் பாராட்டியுள்ளார்.
இதன்போது, பங்களாதேஷுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவுக்கு உயர்ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும், குறிப்பாக விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளினதும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பானது, இலங்கை – பங்களாதேஷ் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.