ஈரானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மறுப்பது நியாயமற்றது – முஜிபுர் ரஹ்மான்
514 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தை முன்னெடுத்து இலங்கைக்கு உதவிய ஈரான், தற்போது மனிதாபிமான உதவிகளைக் கோரும்போது அதனை வழங்க முடியாது எனக் கூறுவது எந்த வகையில் நியாயமானது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவைப் பேணி வரும் ஈரானுடனான உறவில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் 20 வர்த்தகக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு ஈரான் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அரசாங்கத்திடம் இராஜதந்திர ரீதியில் கோரிக்கை விடுத்து வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இதுவரை உரிய பதிலை வழங்காமல் மௌனம் காத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு முக்கியமான அபிவிருத்தித் திட்டமொன்றை வழங்கி உதவிய ஈரானுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஒரு தண்ணீர் போத்தல்கூட வழங்க மறுப்பது வெட்கக்கேடான செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஈரானின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் மூலம் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் பதுளை மாவட்ட விவசாயிகளுக்குப் பாசன நீர் கிடைப்பதுடன், 120 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவதாக முஜிபுர் ரஹ்மான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.