காவந்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி விசேட குழு கோரிக்கை
நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியமாகக் கருதப்படும் காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரவும், சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரின் பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆராயவும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யானையின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கமைய, குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நடவடிக்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதுடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.