புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை!

#SriLanka #LANKA4 #Human Rights #Terrorists #Bill
Abi
2 hours ago
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.

தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள இந்தப் புதிய சட்டமூலத்தில், பயங்கரவாதம் தொடர்பான தெளிவற்ற வரைவிலக்கணம் தொடர்ந்து காணப்படுவதாக அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், எதிர்ப்புப் போராட்டங்கள், அரசாங்கத்தை விமர்சிப்போரின் செயற்பாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் நடவடிக்கைகள் குற்றச் செயல்களாகக் கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் ஒருவரை ஒரு வருடம் வரை தடுத்து வைப்பதற்கும், அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு முன்னதாக மேலும் ஒரு வருடம் வரை தடுத்து வைப்பதற்கும் இந்தச் சட்டமூலம் அனுமதிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம், வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒருவர் இரண்டு வருடங்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமெனவும் அந்தச் சபை எச்சரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், அரசியலமைப்புக்கு இணங்குகிறதா என்பதை ஆராய்வதற்காக தற்போது உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகச் சட்டமூலத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, அதனை முழுமையாக மீளப்பெறுமாறு இலங்கை நாடாளுமன்றத்தைச் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதுவரையில், தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வாய்மூலச் சமர்ப்பிப்புகள் நேற்று உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்தன.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம், குறித்த மனுக்கள் தொடர்பில் எழுத்துமூலச் சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நாளைய தினத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறதா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் இரகசிய வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!