டயானா கமகேவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
போலியான பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கின் சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பு சமர்ப்பணங்களுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, டயானா கமகே முன்னிலையாகாததால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைப் பிரஜை அல்ல என்பதை அறிந்திருந்தும், போலியான பிறப்புப் பதிவேட்டைத் தயாரித்து, தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக ஆள் பதிவுத் திணைக்கள அதிகாரிகளை ஏமாற்றியதாக அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகைகள் 2024ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன.
அரச தரப்பு சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது ஆஜராகியிருந்தார்.