பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றில் முன்னிலையாகிறார் ஞானசார தேரர்!
திருத்தப்பட்ட புதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைய, எதிர்வரும் 23ஆம் திகதி ஞானசார தேரர் பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றில் முன்னிலையாவார் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருக்கு எதிராகச் சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சார்ந்திருக்கும் பௌத்த பிரிவின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்ட விவாதங்களைத் தொடர்ந்து, பிக்குகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை உள்ளடக்கிய நிலையான உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 356 மற்றும் 550ஆம் பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் பிரகாரம், சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் ஆடை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, சிறைச்சாலை அதிகாரிகள் தன்னிச்சையாகத் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்து, சம்பந்தப்பட்ட நிகாயாவின் மகாநாயக்க தேரர்கள் அல்லது சங்க சபையின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் ஊடாக, இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சட்டத் திருத்தப் பணிகள் ஆறு நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திருத்தங்கள் எதிர்காலத்தில் பௌத்த பிக்குகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் போது, சங்க சபையின் வழிகாட்டல்களைப் பெற்று உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைய ஞானசார தேரர் பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.